மிளகு தூக்கலாக சேர்த்து முட்டை பொரியல் செய்வது எப்படி?
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் முட்டையும் ஒன்று.
முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது.
எனவே தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். முட்டையை பல வடிவில் எடுத்து கொள்ளலாம்.
முட்டையை பொரியல் போன்று மிளகு சேர்த்து இன்று செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை -1
- சோம்பு - சிறிது
- சின்ன வெங்காயம் - 1
- தக்காளி - சிறிது
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள் - சிறிது
- மிளகாய் தூள் - சிறிது
- மிளகு தூள் - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
முட்டை பொரியல் தயாரிப்பு
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
பின் அதில் சிறிது உப்பை போட்டு, நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் சோம்பை போடவும். சோம்பு வெடிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதோடு கறிவேப்பிலை, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து சில நிமிடம் கிளறவும்.
பின்பு அடித்து வைத்துள்ள முட்டையை அத்துடன் சேர்த்து 3 நிமிடம் கிளறி வேக விடவும்.
முட்டை வெந்ததும் அதில் கொத்தமல்லியை போட்டு, கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான முட்டை பொரியல் தயார்.