கொரோனாவிலிருந்து தப்பிக்க இரட்டை மாஸ்க்.... மருத்துவர்கள் கூறிய உண்மை
இரு முகக்கவசங்களை அணிவதால் கொரோனா வைரஸ் பரவுதலில் இருந்து தடுப்பது என்பது இரு மடங்கு திறம்பட உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கொரோனா பரவல் வந்ததை அடுத்து கடந்த ஆண்டு முதல் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்குச் சென்றால் மாஸ்க் அணிதல் என்பது அவசியமாகிறது.
அந்த மாஸ்க்களிலும் என் 95, மாஸ்க், என் 80 மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க், பனியன் துணியினால் செய்யப்படும் மாஸ்க், காட்டன் மாஸ்க் என பலவிதங்கள் உள்ளன. அவற்றில் எவற்றை அணிவது என்பது பலருக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
இரட்டை மாஸ்க்குகளை அணிந்தால் கொரோனா பரவலிலிருந்து இரு மடங்கு பாதுகாப்பு அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து ஜேஏஎம்ஏ இன்டர்னல் மெடிசின் ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வுகளில் இரட்டை முகக் கவசங்களை பயன்படுத்துவதால் SARS CoV 2 வைரஸ் பரவல் இரு மடங்கு பாதுகாப்பை கொடுக்கிறது.
இதன் மூலம் கொரோனா வைரஸ் அணிந்திருப்போரின் மூக்கு மற்றும் வாய் பகுதியை அடைவது தடுக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் அந்த இரட்டை மாஸ்க்குகளை லூசாக அணிந்திருந்தால் எந்த பலனும் கிடைக்காது என்கிறார்கள்.
ஒரு மாஸ்க்கின் மீது மற்றொன்றை அணிவதுதான் இரட்டை மாஸ்கிங் ஆகும். அதாவது சர்ஜிக்கல் மாஸ்க் மீது துணி மாஸ்க்கை அணிவது சிறந்தது என நோய் தடுப்பு மற்றும் தொற்று நோய் துறையினர் தெரிவிக்கிறார்கள். அதே வேளையில் மூச்சுவிட சிரமத்தை கொடுக்கும் மாஸ்க்குகள் அணிவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இரு சர்ஜிக்கல் மாஸ்க்குகள் உள்ளன. அவை கேஎன் 95 மற்றும் என் 95 மாஸ்க்குகள் ஆகும். இரட்டை மாஸ்க் என வரும் இந்த மாஸ்க்களில் ஏதேனும் ஒன்றன் மீது ஏதாவது ஒரு மாஸ்க்கை அணிந்து கொள்ளலாம். வெளிப்புறம் இருக்கும் மாஸ்க் உள்புற மாஸ்க்கை மறைக்கும் பொருட்டு உங்கள் முகத்தை மறைக்கும் அளவுக்கு இருத்தல் வேண்டும்.
இரு மாஸ்க்குகளை போட்டு விட்டு நீங்கள் சுவாசிக்கும் போது எந்த பக்கத்தில் இருந்தாவது காற்று வெளியேறுகிறதா என்பது இரு கைகளை வைத்து பாருங்கள். அதே நேரம் டபுள் மாஸ்க் உங்கள் பார்வையை மறைக்கும் விதத்தில் அமையக் கூடாது. 6 அடி தூரத்தில் இருந்து யாருடனாவது பேசினால் ஒற்றை மாஸ்க்கே போதுமானது. இல்லாவிட்டால் டபுள் மாஸ்க் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.