ஒரு பிடி கருவேப்பிலை இருக்கா? இனி தோசையை இப்படி செய்து பாருங்கள்
தினமும் ஒரே மாதிரியான காலை உணவு உங்களை சலிப்புத் தட்ட வைக்கிறதா? ஏதாவது புதிதாக முயற்சி செய்ய விரும்புகின்றீர்களா?
பொதுவாக தோசை அனைத்து வீடுகளிலும் செய்யும் ஒரு உணவுப் பண்டம்தான். அதையும் சற்று வித்தியாசமான முறையில் செய்து பார்ப்போமே...
சூப்பரான தோசை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்!
தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி - 2 கப்
- வெந்தயம் - 1/2 கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- சீரகம் - 1 கரண்டி
- கடுகு - 1/2 கரண்டி
- உளுந்து - 1/2 கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- மிளகு - 1/2 கரண்டி
- இஞ்சித் துருவல் - 1/2 கரண்டி
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- வெங்காயம் - 1
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
அரிசி மற்றும் வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
அரிசி ஊறியதும் அதனுடன் கறிவேப்பிலை ஒரு பிடி, ஒரு ஸ்பூன் சீரகம், அரை கரண்டி மிளகு, அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றியதன் பின்னர் மாவை தண்ணிர் பதத்துக்கே கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அரை கரண்டி கடுகு, உளுந்து, அரை கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
பின்பு கறிவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு, இஞ்சித் துருவல் ஒரு கரண்டி என்பவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வதக்கியதன் பின்னர் கொத்தமல்லி சிறிதளவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்பு இந்த தாளிப்பை கரைத்து வைத்திருக்கும் மாவுடன் கலந்து கொள்ளவேண்டும்.
அதன் மீது இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றிக் கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை சூடுபடுத்தி மாவை தோசையாக ஊற்றி எடுக்கவும்.
ஆங்காங்கே இடைவெளி இருக்கும்படி தோசை ஊற்றினால் தோசை மொறு மொறு என்று இருக்கும்.