கொரோனாவால் இறந்தவரை கண்டுகொள்ளாத உறவினர்: முஸ்லீம் இளைஞர்கள் செய்த சிலிர்க்கவைக்கும் செயல்
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் அதுவும் இந்து முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளனர்.
தெலுங்கானாவின் பெடா கோடப்சல் அடுத்த கட்டேபள்ளி எனும் கிராமத்தில் வசித்தவர் மொகுலையா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் உறுதியானதை அடுத்து ஒருசில தினங்களில் சிகிச்சை பலனின்றி மொகுலையா உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அம்மருத்துவமனை நிர்வாகம் இவரது உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளது.
ஆனால் மொகுலையாவின் உடலைப் பெற்றுக் கொள்ளவோ அவரை அடக்கம் செய்யவோ உறவினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காத நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டும் பணி செய்துவரும் முஸ்லீம் இளைஞர்கள் ஷாஃபி மற்றும் அலி எனும் இருவரும் மொகுலையாவின் உடலை எடுத்துச் சென்று இந்து முறைப்படி அடக்கம் செய்துள்ளனர்.
இதனை அவதானித்த ஊர் மக்கள் மத நல்லிணக்கத்திறகு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று இளைஞர்களை பாராட்டி வருகின்றனர்.