பாம்பு பிடி வீரனின் தவறான செயல் - கடைசியில் உயிரிழந்த பரிதாபம்
பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பை பிடித்தவுடன் அந்த பாம்பை கழுத்தில் சுற்றி ரீல்ஸ் செய்து உயிரிழந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
பாம்பால் பறிபோன உயிர்
பாம்புகள் மனிதர்களை நோக்கி விரைந்து சென்று கடிக்கும் மிருகங்கள் அல்ல. அவை இரையைத் தேடி செல்லும் போது எதிர்பாராதவிதமாக மனிதர்கள் சந்திக்குமானால் தப்பிக்க முயல்கின்றன.
ஆனால், தன்னைக் குறியீட்டுத் தாக்குதலுக்குள்ளாகக் காணும் போது மட்டுமே, தற்காத்துக்கொள்ள பாம்புகள் கடிக்கின்றன. இந்தக் காரணங்களுக்காகவே, பாம்புகளை பிடிக்கின்றவர்கள் மிகுந்த கவனத்துடனும், அனுபவத்துடனும் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அவர்கள் பாம்புகளின் நடத்தையை நன்கு புரிந்தவர்கள் என்பதால், அவற்றை பாதுகாப்பாக பிடித்து காட்டில் விடுகிறார்கள். ஆனால், இந்த அனுபவமும் சில நேரங்களில் தவறாகி விட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதற்கு சமீபத்திய ஒரு சம்பவமே சான்றாக உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், குணால் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான தீபக் மஹாவர், பல ஆண்டுகளாக பாம்புகளை பிடித்து காட்டில் விடும் பணியில் ஈடுபட்டு வந்தவர்.
ஒரு புகழ்பெற்ற பாம்புபிடி வீரரான இவர், கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து அனுப்பியுள்ளார். இந்நிலையில், குணால் மாவட்டத்தின் பர்பத்புரா கிராமத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில், ஒரு விஷப்பாம்பு பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அந்த பள்ளியின் அழைப்பை ஏற்று, தீபக் மஹாவர் சம்பவ இடத்திற்கு சென்றார். சற்று நேரத்தில் பாம்பை சீராகக் கட்டுப்படுத்தி பிடித்தார். அதே நேரத்தில், அவரது வீட்டிலிருந்து வந்த தொலைபேசியில், பள்ளியில் படிக்கும் மகனை அழைத்து வருமாறு கூறப்பட்டது.
இதையடுத்து, பாம்பை பாதுகாப்பான தூரத்தில் வைக்காமல், தனது கழுத்தில் அந்த நாகப்பாம்பை போட்டு, மோட்டார் சைக்கிளில் மகனை அழைத்து வர பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.
வழியிலேயே, தீபக் மஹாவர் தனது கழுத்தில் பாம்பு இருப்பதை செல்போனில் வீடியோ எடுத்து, ரீல்ஸாக வெளியிட்டார். ஆனால் அந்த "ரீல்ஸ்" அடுத்த சில நிமிடங்களில், சோகக்கதையாக மாறியது. ஏனெனில், வழியில் பாம்பு திடீரென அவரது கை மீது கடித்தது.
விஷம் உடலில் பரவ, அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சைக்கும் பிறகு, தீபக் மஹாவர் உயிரிழந்தார். அவரது உயிரைப் பறித்த அந்த விஷப்பாம்பை கழுத்தில் சுற்றி எடுத்த ரீல்ஸ் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
