கண்முன் துடிதுடித்து இறந்த குழந்தைகள்: துக்கத்தில் தந்தை தற்கொலை
நேற்றைய தினத்தில் தனது கண்முன் இரண்டு குழந்தைகள் மரணித்த நிலையில், தந்தை இன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (44). இவருடைய மனைவி மீனாட்சி(37). இவர்களுக்கு ஜஸ்வந்த் (8) என்ற 4ம் வகுப்பு படிக்கும் மகனும், ஹரிபிரீத்தா (6) என்ற 2ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடிக்கிடப்பதால், மீனாட்சியின் அம்மாவான பாட்டி வீட்டுக்கு வந்து லோகேஸ்வரன் குடும்பத்தோடு தங்கியிருந்தார்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, லோகேஸ்வரன் குடும்பத்துடன் ஆம்பூரை அடுத்த கைலாசகிரி மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்றார்கள்.
அங்குள்ள குளத்தில் மீன் பிடித்தபோது குழந்தைகள் இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்த நிலையில், நீச்சல் தெரியாத லோகேஸ்வரன் கஷ்டப்பட்டு மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார்.
ஆனால், தண்ணீர்ல் விழுந்ததில் மூச்சுத் திணறி குழந்தைகள் உயிரிழந்ததால், பெற்றோர்கள் கதறி அழுத புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களைக் கலங்க வைத்தது.
பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட குழந்தைகளின் உடல்களைப் பெற பிணவறைக்கு வெளியே லோகேஸ்வரனும் மீனாட்சியும் கதறியபடி இருந்துள்ளனர்.
குழந்தைகளின் மரணத்தால் துக்கம் தாளாமல் இருந்த தம்பதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய நினைத்து குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து முதலில் கணவர் குடித்துள்ளார். இரண்டாவதாக மீனாட்சி குடிக்க முயன்ற போது லோகேஸ்வரனே தட்டிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் லோகேஸ்வரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் கணவர் உயிரிழந்துவிட தப்பிய தாய் மீனாட்சி மருத்துவமனையில் கதறி துடித்தவரை உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்தச் சென்றுள்ளனர்.