விற்பதற்காகவே குழந்தைகளை பெற்று வந்த தம்பதியினர்: வசமாக சிக்கியது எப்படி?
குடும்ப சூழ்நிலை கருதி குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்து நிற்கும் போது அந்த குழந்தைகளை வளர்க்க வழியில்லாமல் சில தம்பதியினர் விற்றுவிடுவது உண்டு. ஆனால் குழந்தைகளை விற்பதற்கு என்றே பெற்றெடுத்திருக்கின்றனர் ஒரு தம்பதியினர். நீலகிரி மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
உதகை காந்தல் கஸ்தூரிபாய் காலனியைச் சேர்ந்தவர் ராபின்(25). இவரது மனைவி மோனிஷா(20). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தையை 3 மாதத்திலேயே உதகை மேரிஸ் பகுதியைச் சேர்ந்த பாருக் என்பவருக்கு இவர்கள் விற்று விட்டனர். 4 மாத ஆண் குழந்தையை சேலம் உமா மகேஸ்வரிக்கு விற்றுள்ளனர்.
மூன்றாவது பெண் குழந்தை மோனிஷாவின் அக்காவின் பராமரிப்பில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. அந்த குழந்தையையும் தூக்கிச் செல்ல வந்திருக்கிறார் ராபின். அப்போது குடிபோதையில் இருந்த ராபின், இரண்டு பிள்ளைகளை விட்டது போல் இந்த பிள்ளையும் பெங்களூரில் ஒருவருக்கு விற்கப் போகிறேன் என்று உண்மையை உளறி இருக்கிறார்.
அப்போதுதான் தனது அக்காவும் அவள் கணவரும் ஏற்கனவே இரண்டு குழந்தைகளை விற்றுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் மூன்றாவதாக குழந்தையை விற்கப் போவதாகவும் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்து போய் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர் உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் விரைந்து வந்து மோனிஷா- ராபின் இருவரிடையே விசாரித்தபோது இடைத்தரகர் கமல் மற்றும் குழந்தையை வாங்கிய பார்க், உமாமகேஸ்வரி ஆகிய இருவரும் சிக்கினர். 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.