திருட்டு காரிலேயே போலீசை கடத்தி சென்ற திருடன்: சுவாரசியமான உண்மை சம்பவம்
பிறனகஇந்தியாவில் டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவரை 29 வயது இளைஞர் திருட்டு காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டிஸ்கர் மாநிலம் சுராஜ்பூரில் டிராபிக் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் விரேந்தர் சிங்(வயது 39).
கடந்த சில நாட்களுக்கு முன்னர், 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரை திருடிக் கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சுராஜ்பூர் நகரை சுற்றிலும் வாகனங்களை சோதனையிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விரேந்தர் சிங்கும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான மாருதி ஸ்விஃப்ட் டிசைர் கார் ஒன்று நின்றிருந்ததைக் கண்ட அவர், அதன் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் அளித்ததால் , வண்டியின் ஆர்சி புக்கை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
உடனே சிறிது நேரம் தேடுவது போல் நடித்துவிட்டு, காரின் உள்ளே இருப்பதாக விரேந்தர் சிங்கை உள்ளே அழைத்துள்ளார்.
அவரும் நம்பி ஏறவே, சட்டென காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார், இதைச் சற்றும் எதிர்பாராத கான்ஸ்டபிள் விரேந்திர சிங், தன்னை இறக்கிவிடுமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துள்ளார்.
ஆனால், அந்த மர்ம நபர் அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அதற்குள் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தைக் கார் கடந்து சென்றுவிட்டது.
இதனால், பதற்றமடைந்த விரேந்திர சிங், கொஞ்சம் நிதானித்து, அம்மாநில அவசர உதவி எண்ணான 112க்கு அழைத்து நிலைமையை அவசர கதியில் விளக்கியுள்ளார்.
இதைப் பார்த்ததும், மர்ம நபர் ஒருநொடி கூட தாமதிக்காமல் விரேந்தர் சிங்கை கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து விரேந்தர் சிங்கை மீட்ட சக போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர், காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.