40 ஆண்டுகால சமையல் அனுபவம்… 20+ புத்தகங்கள் - உலகளாவிய புகழ்! செஃப் தாமுவின் சாதனைப் பயணம்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார் பிரபல சமையல் கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவருமான செஃப் தாமு, உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமையல் துறையில் பல சாதனைகளைப் படைத்த அவரது வாழ்க்கைப் பயணத்தையும், சாதனைகளையும் விரிவாகப் பார்ப்போம்.

செஃப் தாமு
தாமோதரன் என்பது செஃப் தாமுவின் இயற்பெயர். சமையல் கலையில் சிறந்து விளங்கிய இவர், இந்தியாவின் பல்வேறு நட்சத்திர உணவகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
உலகின் பல்வேறு நாடுகளின் உணவு வகைகளைத் தயாரிப்பதிலும் திறமை பெற்றிருந்தார். 2004ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

24 மணிநேரத்தில் 617 உணவுகள்
இந்தத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 2010ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 விநாடிகளில் 617 வகையான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார்.
இந்தச் சாதனை அவரது சமையல் திறமைக்கும் கடின உழைப்புக்கும் சான்றாக அமைந்தது. தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார் செஃப் தாமு.

‘குக் வித் கோமாளி’
குறிப்பாக, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது அன்பையும் பெற்றார். தனது நகைச்சுவையான அணுகுமுறை மற்றும் இயல்பான பேச்சால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் நின்றுவிடாமல், தனது சமையல் பயணத்தை யூடியூப் தளத்திலும் தொடர்ந்தார். அவரது சாதனைகளையும் சமையல் துறைக்கான பங்களிப்பையும் பாராட்டி, லண்டன் உலகத் தமிழ் அமைப்பு 2021ஆம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிக் கௌரவித்தது.

2024ஆம் ஆண்டு கேட்டரிங் தொழிலையும் தொடங்கி நடத்தி வந்தார். தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த 20க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். இதன் மூலம் பாரம்பரிய உணவுகள் மற்றும் சமையல் முறைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதிலும் இவரின் பங்கு அளப்பறியது.
தமிழகத்தின் பாரம்பரிய சமையல் கலையை உலக அரங்கில் எடுத்துச் சென்றதில் செஃப் தாமுவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ விருது
சமையல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, மத்திய அரசு 2025ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. சமையல் துறையைத் தாண்டியும் திரையுலகிலும் செஃப் தாமு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
‘கள்ளப்படம்’, ‘உள்குத்து’ உள்ளிட்ட திரைப்படங்களில் சமையல் கலைஞராக நடித்ததுடன், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் தோன்றியுள்ளார்.
சமையல் கலையில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, தனது திறமையாலும் சாதனைகளாலும் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த செஃப் தாமுவின் மறைவு, அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சமையல் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |