Broccoli Fry: ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல்
பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி அறியப்படுகின்றது.
இதில் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம் சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது.
எனவே ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில், சிறந்த இடத்தை பிடித்து வைத்திருக்கும் ப்ரோக்கோலியில் எவ்வாறு அசத்தல் சுவையில் ப்ராக்கோலி மிளகு வறுவல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ப்ராக்கோலி - 1
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
தாளிப்பதற்கு
வெள்ளை எள்ளு - 2 தே.கரண்டி
மிளகுத் தூள் - 2 தே.கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
சோம்புத் தூள் - 1 தே.கரண்டி
எண்ணெய் - 2 தே.கரண்டி
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி,அதில் நறுக்கிய ப்ராக்கோலியை போட்டு அடுப்பில் வைத்து, அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை சேர்த்து, வாசனை வரும் வரையில் நன்கு வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதே பாத்திரத்தில் மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களையும் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிதளவு உப்பு தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ப்ராக்கோலியை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, அதனுடன் வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடங்கள் வேகவிட்டு, இறுதியாக எள்ளு விதைகளைத் தூவி கிளறி இறக்கினால், ஆரோக்கியம் நிறைந்த ப்ராக்கோலி மிளகு வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |