உயிருக்கு உலை வைக்கும் பிரியாணி: இந்த நேரத்தில் தவறிக்கூட சாப்பிட்டு விடாதீங்க
இன்றைய வாழ்க்கை முறையில் தனது வேலையின் நிமித்தமாக தங்களது பழக்க வழக்கங்களையும் மாற்றி வருகின்றனர்.
ஐ.டி கலாச்சாரம் நம்மிடம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதில் புதிதாக நள்ளிரவு பிரியாணியும் இணைந்துள்ளது.
இரவில் பணியாற்றும் ஐ.டி.துறையினருக்காகவே, நள்ளிரவில் அதிகமான உணவகங்கள் இயங்கி வருவதுடன், இதில் பிரியாணி தான் முக்கிய இடம் பிடித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, சிக்கன், மட்டன், இறால், மீன் என வகைவகையான பிரியாணிகள் சூடாக பரிமாறப்படுகின்றன.
பிரியாணி மட்டுமல்ல, சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் கபாப் போன்ற காரசார உணவுகளும் பரிமாறப்படுகின்றன. அதனால் நள்ளிரவு ஓட்டல்களில், அதிகபடியான ஐ.டி.ஊழியர்களை பார்க்கமுடிகிறது.
இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், இதுபோன்ற உணவகங்களுக்கு சென்று உணவருந்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இவ்வாறு நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடுமாம்.
நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
சில ஓட்டல்களில், பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் என பதற வைக்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் நள்ளிரவில், இதுபோன்ற 'ஹெவி' உணவுகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.
பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்க சொல்கிறார்கள்.
நள்ளிரவில் கண்விழித்து பணியாற்ற, டீ-காபி மட்டும் போதுமானது என்பவர்கள், இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.