பாவக்காயை துருவி செய்யும் பொடி- பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க
பொதுவாக வீடுகளில் பாவக்காய் சமைக்கிறார்கள் என்றாலே சிலர் ஓடுவிடுவார்கள். எப்படி செய்தாலும் பாவக்காயை சுவைக்காதவர்கள் என ஒரு கூட்டமே இன்னும் இருக்கிறார்கள்.
இப்படி இருப்பவர்களுக்காக வீட்டில் இருக்கும் இட்லி பொடியை பாவக்காய் பொடியாக மாற்றி விடுவோம். இந்த பாவக்காய் பொடியில் கசப்புத்தன்மை அதிகமாக இருக்காது.
இதனை சாப்பிடும் பொழுது தேங்காய் மற்றும் பருப்பு சுவை தான் அதிகமாக வரும். இட்லி மட்டுமல்லாமல் தோசை, சாதம், சப்பாத்தி என அனைத்து உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாவக்காய் பொடி சாப்பிட்டால் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
இவ்வளவு சிறப்பு கொண்ட பாவக்காய் பொடியை எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாவக்காய் பொடி
தேவையான பொருட்கள்
* பாவக்காய் - 150 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8
* புளி - சிறு துண்டு
* பூண்டு - 5 சிறிய பல்
* உப்பு - சுவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.
செய்முறை
- முதலில் பாவக்காயை கழுவி துடைத்து நீர் இல்லாமல் எடுத்து வைத்து கொள்ளவும். அதை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட்டு அதை துருவிக் கொள்ள வேண்டும். பின் துருவிய பாவக்காயில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து விட வேண்டும்.
- அதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும், துருவிய பாகற்காயை சேர்த்து நன்கு நீர் வற்றும் வரை வறுத்தெடுக்கவும். ஒரு தட்டில் வறுத்த பாகற்காயை கொட்டி வைக்கவும். அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து, அதில் உள்ள நீர் வற்றும் வரை வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்து குளிர வைக்கவும்.
- பிறகு மீண்டும் அந்த வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.
- இதனை தொடர்ந்து வறுத்தெடுத்த பொருட்களுடன் மல்லி, சீரகம், வரமிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து ஒன்றாக வறுத்தெடுக்கவும்.
- அடுத்து, மிக்சர் ஜாரில் வறுத்த பாவக்காய், துருவிய தேங்காய் மற்றும் வறுத்த பிற பொருட்களையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- கடைசியாக காற்றுப்புகாத டப்பாவில் பொடியை போட்டு வைத்தால் சுவையான பாவக்காய் பொடி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |