சுகர் நோயாளியா? துளியும் கசப்பே இல்லாத பாகற்காய் சாம்பார்! பத்தே நிமிடத்தில் ருசிக்கலாம் வாங்க
பாகற்காய் என்று சொன்னவுடன் பலருக்குக் குமட்டல் வந்துவிடும்.
பாகற்காயில் நமக்கு நன்மை தரும் பல அம்சங்கள் இதில் உள்ளன.
இதில் உள்ள சாரன்டின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை குறைக்கும். இதேபோல் பாலிபெப்டைடு பி என்ற இன்சுலின் பாகற்காயில் உள்ளது. இது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்படவும் உதவி புரியும்.
எனவே, பாகற்காய் அந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கவேண்டிய காய் அல்ல. துளியும் கசப்பே இல்லாத அளவு பாகற்காய் சாம்பார் செய்து அனைவருமே ருசிக்கலாம்.
இன்று பாகற்காய் பத்தே நிமிடத்தில் சாம்பார் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாகற்காய் - கால் கிலோ
- துவரம்பருப்பு - 1 கப்
- புளி - நெல்லிக்காய் அளவு
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
- தனியா - 3 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 6
- துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடுகு - கால் தேக்கரண்டி
- பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 2
- கறிவேப்பிலை - தேவைக்கு
செய்முறை
பாகற்காய் சாம்பார் செய்வதற்கு முதலில் பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் நறுக்கி தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு நன்றாக நீரில் அலசி பாத்திரத்தினை அடுப்பில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
வெறும் பாத்திரத்தினை மிதமான தீயில் வைத்து, தனியா, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து பொடித்து எடுத்து கொள்ளவும்.
பிறகு தேங்காய் துருவலையும் அரைத்து வைத்து கொள்ளவும்.
பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பருப்பு வெந்ததும் அதை மசித்து கொள்ளவும்.
புளி கரைத்து அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து அதில் பாகற்காயை சேர்த்து பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்னர் பாத்திரத்தினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூப்பரான பாகற்காய் சாம்பார் ரெடி.
முக்கிய குறிப்பு
தினமும் பாகற்காயைக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டி வரும்.
நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் எடுத்து கொள்வதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.