காபி குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா? நிபுணர்களின் கருத்து இதோ
காபி என்றாலே பலருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால் தான் அன்றைய நாளே சிலருக்கு துவங்கும். காபி என்பது ஒரு ஆற்றலை வழங்கும் ஒரு பானமாக கருதப்படுகிறது. சில சமயங்களில் நம் குறுகிய மற்றும் நீண்டகால நினைவகத்தை மேம்படுத்த உதவுகிறது. புத்துணர்ச்சி தருவதாலேயே காபி குடிக்க பலர் விரும்புகிறார்கள். காபி பிரியர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் காபி குடிப்பார்கள்.
இருப்பினும், உங்கள் காபி நுகர்வில் கவனம் செலுத்தாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு அதிகமான கப் காபி குடிப்பதால் உங்கள் உடலில் காஃபின் என்ற போதை பொருள் ஏற்றப்படுகிறது. அதிகப்படியான காஃபின் நுகர்வு பல சுகாதார பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் நீங்கள் தினமும் எவ்வளவு காபி குடிக்கலாம்? எந்த சமயத்தில் குடிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
காபி குடிக்க சிறந்த நேரம் எது? காலை எழுந்ததும் காபி குடிப்பதால் நாள் முழுவதும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது. காரணம் என்னவென்றால், உங்கள் உடலில் உள்ள கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும்.
இது ஒருவரை விழித்திருக்கவும் ஆற்றல் மிக்கதாகவும் வைத்திருக்கும் மூலக்கூறாக அறியப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியில் காஃபின் தலையிடக்கூடும்.
கார்டிசோலின் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் காபி குடித்தால், அது உங்கள் உடலில் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. அதுவே கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு குறையும். எனவே, காபி குடிக்க விரும்புபவர்கள் 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காபி குடிக்கவும்.
அதிலும், காலை உணவு சாப்பிட்ட பிறகு காபி குடிப்பது சிறந்தது என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் காபி குடிக்கும் போது குறைந்த அளவு குடிப்பது தான் நல்லது. ஏனெனில் காபி குடித்த அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை இரத்த ஓட்டத்தில் காஃபின் உச்சம் பெறுகிறது.
பின்னர் பல மணிநேரங்களுக்கு உடலில் காஃபின் அளவு உயர்ந்தே காணப்படும். எனவே, ஒவ்வொரு முறையும் காபி குடிக்கும் போது 2 அவுன்ஸ் அளவு குடிப்பதே சிறந்தது. அதேபோல, நீங்கள் மாலையில் எடுத்துக்கொள்ளும் காபியை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்வதால் அது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.