நம் வீட்டில் மறைந்திருக்கும் வைத்தியம்! ஏழைகளின் குங்குமப் பூ மஞ்சள்
நமது ஆரோக்கியத்தை சரியாக பேணிக் காத்துக் கொள்வதற்கு ஆங்கில மருத்துவங்கள் மாத்திரமின்றி இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகைகளையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக எத்தனையோ மருத்துவ குணம் மிக்க மூலிகைகள் நம்மைச் சுற்றி காணப்பட்டாலும் மஞ்சளுக்கு என்றுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு.
மருத்துவ துறையானது பாரிய அளவில் வளர்ச்சியைக் கண்டிராத நம் முன்னோர்களின் காலம்தொட்டே மருத்துவத்தில் மஞ்சளின் பங்களிப்பு பெரும் பாகத்தைக் கொண்டுள்ளது.
மஞ்சளின் பல வகைகள்
- கஸ்தூரி மஞ்சள்
- முட்டா மஞ்சள்
- கரிமஞ்சள்
- நாக மஞ்சள்
- விரலி மஞ்சள்
- ஆலப்புழை மஞ்சள்
- குடமஞ்சள்
- காட்டு மஞ்சள்
- மர மஞ்சள்
- பலா மஞ்சள்
- குரங்கு மஞ்சள்
- காஞ்சிரத்தின மஞ்சள்
இதில் பெரும்பாலும் நமக்கு தெரிந்ததும் அதிகமாக உபயோகப்படுத்தும் வகை என்றால், அது கஸ்தூரி மஞ்சள், கரி மஞ்சள் இரண்டும் தான்.
இதை 'ஏழைகளின் குங்குமப் பூ' என்றும் அழைக்கின்றார்கள். மஞ்சளில் விட்டமின் சி, பொஸ்பரஸ், இரும்பு, கல்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற சத்துக்களும் உள்ளடங்கியுள்ளன.
மஞ்சளானது உடலில் ஏற்படும் நோய்க்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்தது.
மஞ்சளானது, உடலுக்கு மட்டும் நலத்தை பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாது, பெண்களின் அழகை மெருகேற்றுவதிலும் பாரிய பங்காற்றுகிறது. அதுமாத்திரமின்றி மஞ்சளானது, பாரம்பரியத்துடன் தொடர்புடைய மங்களகரமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இனி மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்...
* மஞ்சள் மிகச் சிறந்ததொரு கிருமிநாசினியாகும்.
வீட்டில் கிருமிகள் அண்டாமல் இருப்பதற்கு மஞ்சளை நீரில் கரைத்து வீட்டைச் சுற்றி தெளித்தால் கிருமிகள் அழிக்கப்படும்.
* உடலில் ஏற்படும் கட்டி, கொப்புளங்கள் என்பவற்றை உடைக்கும்.
கஸ்தூரி மஞ்சளை அரைத்து அடிபட்ட, கட்டிகள் உள்ள இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறைவடையும்.
* வாயு பிரச்சினையை தடுக்கிறது.
அஜீரணக் கோளாறுகளிலிருந்து விடுபட உதவுகிறது.
* பாலுடன் மஞ்சள் சேர்த்துப் பருகுதல்.
பாலுடன் மஞ்சள் சேர்த்துப் பருகுவதால் உடலுக்கு புத்துணர்ச்சியும், பலமும் அதிகரிக்கும்.
* புற்றுநோய் செல்களை அழிக்கும்.
மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
* அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளை போக்க மஞ்சள் சிறந்த பொருளாகும்.
மஞ்சளுடன் வேப்பம் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பூசி வந்தால் அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மாறும்.
இவ்வாறு பல மருத்துவ குணங்கள் மஞ்சளுக்கு உண்டு. மருத்துவ குணங்கள் மாத்திரமின்றி பெண்களுக்கான அழகு சார்ந்த விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
உதாரணமாக, முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள், தேவையற்ற முடிகளை நீக்க மஞ்சள் உதவுகிறது. மனிதனின் உடல், மாத்திரமின்றி உட் பாகங்களில் ஏற்படும் நோய்களையும் தீர்க்கவல்ல ஒரு சிறந்த நிவாரணியாக மஞ்சள் காணப்படுகிறது.
மஞ்சளை வீட்டு வைத்தியர் என்று கூறினாலும் தவறில்லை.