மொழியை உயிருக்கு நிகராக நினைத்தவர் கவிஞர் பாரதிதாசன்
1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி கனகசபை முதலியாருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.
இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புனைப்பெயர் பாரதிதாசன். இவரது பிறப்பிடம் புதுவை. துணைவியார் பழநி அம்மையார்.
மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த பாரதிதாசன், தனது ஆரம்பக் கல்வியை திருப்பொழிச்சாமி என்பவரிடம் கற்றார்.
அதன்பின்னர் மகாவித்துவான் பெரியசாமி புலவர் என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்கள் கற்றார். இவர் தனது ஆரம்பக் கல்வியை ப்ரேஞ்ச் பாடசாலையில் கற்றார். இருந்தாலும் தமிழ் மீது இருக்கும் பற்று காரணமாக தமிழை முறைப்படி கற்றுக்கொண்டார்.
தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டத்தைப் பயின்று பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். பின்னர் 1919இல் காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமண வாழ்வில் இவர்களுக்கு 7 பிள்ளைகள் உள்ளனர்.
சிறுவயதிலிருந்தே இசையுணர்வும் நல்லெண்ணமும் அவரது மனதில் கவிதையுருவில் காட்சியளித்தன. அதனால் அதனை பாடல்களாக எழுதி தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவாராம்.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், 'கிறுக்கன், கிண்டல்காரன், கண்டழுதுவோன்' என்னும் புனைப்பெயர்களில் எழுதி வந்துள்ளார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்ராக விளங்கினார் பாரதிதாசன். அதுமாத்திரமில்லாமல் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, சாதி மறுப்பு என்பவற்றினை தமது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
இவர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்த வகையில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
உலகத்திலுள்ள கவிஞர்களிலேயே ஒரு மொழியை தன் உயிருக்கு நிகராக நினைத்தவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
இவர் தனது படைப்புக்களை கவிதை, நாடகம், சிறுகதை, இசைப்பாடல், கட்டுரை, புதினம் ஆகிய வடிவங்களில் வெளியிட்டார்.
விருதுகள்
1946இல் அமைதி ஊமை என்ற நாடகத்துக்காக தங்கக் கிளி பரிசு கிடைத்தது.
1970இல் பிசிராந்தையார் நாடகத்துக்காக சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது. (இது அவர் இறந்ததன் பின்னர்)
2001அக்டோபர் 9ஆம் திகதி சென்னை தபால்துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல் தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
பெரியார் 'புரட்சி கவிஞர்' என்ற பட்டத்தையும் அறிஞர் அண்ணா 'புரட்சிக் கவி' என்ற பட்டத்தையும் வழங்கினார்கள்.
ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை தமிழ்நாடு மாநில அரசாங்கம் வழங்குகின்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் மாநில பல்கலைக்கழம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
1964ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
பாரதிதாசன் கவிதை வரிகள் சில...
- தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே...தமிழைப் பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே.
- பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத்தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.
- தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான். தமிழ் தாழ்ந்தால், தமிழன் வீழ்வான்.
- மழை என்பது இயற்கையின் கொடை. அது விரும்பி அழைத்தாலும் வராது புலம்பிப் போவென்றாலும் போகாது.
- தெய்வம் அறிவுக்கடலாக இருக்கிறது. அதில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திவலையாக இருக்கிறோம்.
- சுயநலத்தை கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை மட்டுமே பேசு. நியாயமான செயல்களில் ஈடுபடு. எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.