குழந்தை இறந்து பிறந்ததாக கூறிய மருத்துவர்: அடக்கம் செய்யும் போது நிகழ்ந்த ஆச்சரியம்
தமிழகத்தில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் குழந்தை இறந்து பிறந்துள்ளதாக கூறிய நிலையில், அக்குழந்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த போது உயிர் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பேரூராட்சி தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரன் ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி என்கிற வானரசி.
6 மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்படவே, தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அதிகாலை அவருக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்தே பிறந்ததாக தெரிவித்து மருத்துவர்கள், குழந்தையின் உடலை வாலி ஒன்றில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தையை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு கொண்டு சென்று புதைக்க முற்பட்ட போது, குழந்தையை மூடியிருந்த துணியை திறந்து பார்த்த உறவினர்கள் குழந்தை உயிருடன் இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது தெரியவரவே, செயற்கை சுவாச கருவி உதவியுடன் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பணியில் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்து உள்ளார்.
உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறி மருத்துவர்கள் அளித்த சம்பவம் தேனி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.