ஆரஞ்சு பொடி டப்பாவில் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம்... சென்னை விமானநிலையத்தில் வசமாக சிக்கியது எப்படி?
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நுாதனமான முறைகளில் தங்கம் கடத்தப்பட்டு வருவதால், வெளிநாட்டு அஞ்சல்கள் அலுவலகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, துபாயில் இருந்து சென்னை முகவரிக்கு ஒரு பார்சல் வந்துள்ளது.
சோதனைக்காக அதிகாரிகள் அதைப் பிரித்துப் பார்த்தபோது, நான்கு TANG ஆரஞ்சு பொடி டப்பாக்கள் இருந்தன.
வழக்கத்தை விட அவை அதிக கனமாக இருக்கவே அதிகாரிகள் அவற்றின் சீலிங் கவரை உடைத்து பார்த்தனர்.
டப்பாக்களின் உள்ளே ஆரஞ்சு பொடி இருந்தது. சல்லடையில் அந்த பொடியைக் கொட்டி சலித்தபோது பொடிக்குள் இருந்து சின்னஞ்சிறு தங்கக் கட்டிகள் விழுந்தன.
இப்படி பிரிக்கப்பட்ட சின்னஞ்சிறு தங்கக் கட்டிகள் மட்டும் 2.5 கிலோ எடையுள்ளதாக இருந்தன. அவற்றின் மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் என்கின்றனர் அதிகாரிகள்.
பார்சல் வந்த சென்னை முகவரிக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தபோது அந்த முகவரியில் வசிப்பவர்களுக்கும் பார்சலுக்கும் தொடர்பில்லை என்பதும் முகவரி வேண்டும் என்றே தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு அஞ்சல் பிரிவில் பணியாற்றும் சிலரிடம் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.