படம் பார்க்க வந்து உயிரிழந்த இளைஞர்! அஜித் விஜய் மீது கொடுக்கப்பட்ட பரபரப்பு புகார்
துணிவு படத்தினை பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அஜித் மற்றும் விஜய் மீது சென்னை சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர் திடீர் மரணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத், ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார். கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள இவரின் திரைப்படம் வெளியீடு என்றாலே ரசிகர்கள் அந்த திரையரங்குகளில் குவிந்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், 11ம் தேதி இரவு துணிவு படம் வெளியாகியுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட பல பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி கடந்த 11ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. வசூலிலும் சாதனை பெற்று வருகின்றது.
இந்நிலையில் படத்தினை பார்க்க வந்த பரத்குமார் என்ற ரசிகர் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விஜய் அஜீத் மீது புகார்
தற்போது விஜய் அஜீத் மற்றும் குறித்த திரையரங்கு உரிமையாளர் இவர்கள் மீது சென்னை சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் காவல் ஆணையரிடம் இணைய வழியாக புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில் இரு குழுவினர் இடையே பகைமையை வளர்த்துக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் அஜீத் மற்றும் விஜய் இருவர் மீதும், மேலும் கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்த திரையரங்கு உரிமையாளர் மீதும் புகார் அளித்துள்ளார்.