லக்கேஜின் அதிகரிப்பால் விமான நிலையத்தில் 30 கிலோ பழத்தை சாப்பிட்ட நண்பர்கள்.. இறுதியில் ஏற்பட்ட சோகம்!
தென்மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணத்தில், வசிக்கும் வாங் என்ற நபர் அவரது மூன்று நண்பர்களுடன் வணிக பயணத்திற்காக குன்மிங் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அதற்கு முன்னதாக ஒரு கடையில் 50 யுவான் ( இந்திய மதிப்பில் ரூ. 564) மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள ஆரஞ்சு பழ பெட்டியை வாங்கியுள்ளனர். இதன் பின்னர், அவர்கள் பழங்கள் வாங்கியபோது, ஆரஞ்சுக்கான லக்கேஜ் கட்டணமாக கூடுதல் பணத்தை விமான நிலையத்தில் செலுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை.
இதனை தொடர்ந்து, அவர்கள் விமான நிலையத்துக்கு சென்று விமானத்தில் ஏறத் தயாரானபோது ஆரஞ்சுக்கான லக்கேஜ் கட்டணமாக ஒவ்வொரு கிலோ ஆரஞ்சு பழத்திற்கும் 10 யுவான் என மொத்தம் 300 யுவான் (ரூ. 3384) செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத நான்கு பேரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் ஆரஞ்சு பழங்கள் வாங்கிய விலையை விட லக்கேஜ் கட்டணம் அதிகமாக இருந்ததால் அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தயாராகவும் இல்லை.
இதனால் விமான நிலையத்திலேயே அந்த 30 கிலோ பழங்களை சாப்பிட்டு விடலாம் என முடிவு செய்தனர். அதன்பின், நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து 30 கிலோ ஆரஞ்சு பழங்களையும் சாப்பிட்டும் முடித்துள்ளனர். இதுகுறித்து குளோபல் டைம்ஸிடம் பேட்டியளித்த வாங், "நாங்கள் விமான நிலையத்திலேயே அனைத்து பழங்களையும் சாப்பிட்டோம், இதற்கு சுமார் 20-30 நிமிடங்கள் தேவைப்பட்டது" என கூறியுள்ளார்.
இது ஒரு வித்தியாசமான நிகழ்வாக அமைந்தாலும் கூட, அந்த நான்கு பேரும் ஒரே நேரத்தில் சிட்ரஸ் அமிலம் நிறைந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டதால் வாய் புண்ணால் அவதிப்பட்டனர்.
இதற்காக தற்போது நான்கு பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இனிமேல் ஆரஞ்சு பழமே சாப்பிடக்கூடாது என முடிவு செய்துள்ளனர்.