நடிகர் விஜயின் கார் விவகாரம்- நீதிமன்றத்தின் நிவாரண கோரிக்கைக்கு விஜய் தரப்பு கொடுத்த பதில்!
நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் மீண்டும் ஒரு புதிய திருப்பம் அரங்கேறியுள்ளது. 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனி நீதிபதி விதித்த தீர்ப்பை எதிர்த்தும், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், "ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறோம். ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு, இன்று (28.7.2021) தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் நிவாரணமாக வழங்கக்கூடாது" என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கொடுத்துவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.