200 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை… திருவிழா போல வரவேற்ற குடும்பம்!
After 200 Years, A Girl Is Born In Maharashtra Family : மகாராஷ்டிர மாநிலம் பீட் பகுதியில், சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததை, தஹிஃபாலே குடும்பத்தினர் திருவிழா போலக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
பல தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காத நிலையில், தற்போது பிறந்துள்ள பச்சிளம் குழந்தைக்கு ‘கார்கி’ எனப் பெயரிட்டுள்ளனர். தங்கள் குடும்பத்தின் நீண்டகாலக் குறை தீர்ந்துவிட்ட மகிழ்ச்சியில், குழந்தையை மிகவும் விமரிசையாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

வைரலாகும் காணொளி
மருத்துவமனையில் இருந்து தாயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், இருவரையும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து, மேளதாளங்கள் முழங்க உறவினர்கள் ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். “இத்தனை ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் இல்லாமல் இருந்த பெண் குழந்தை தற்போது பிறந்திருக்கிறாள்.

எங்கள் வீட்டிற்கே மகாலட்சுமி வந்துவிட்டாள்” எனக் குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தை என்றாலே சுமை என்ற பழைய எண்ணங்கள் இன்றும் சில இடங்களில் நிலவி வரும் நிலையில், “பெண் குழந்தையும் குடும்பத்தின் பெருமைதான்” என்பதை உணர்த்தும் வகையில் இந்தக் கொண்டாட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |