மண்ணுக்குள் புதைந்திருந்த ரூ.98 கோடி தங்கப் புதையல்!
பெல்ஜியத்தில் பழமையான கட்டடம் ஒன்றில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின்போது, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதைந்திருந்த கோடிக்கணக்கான தங்கம்
பிளாண்டர்ஸ் மாகாணத்தில் உள்ள டென்டர்மாண்ட் நகரில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட பழமையான மாளிகை ஒன்று உள்ளது.

ஒரு காலத்தில் மதுபான ஆலை உரிமையாளருக்குச் சொந்தமான இந்தக் கட்டடம், தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகத்தில் உள்ளது.
இங்கு தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக தொழிலாளர்கள் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது, 18 வயதான கோபி என்ற தொழிலாளியின் கண்களில் மண்ணுக்குள் இருந்து பளபளப்பாக ஏதோ ஒன்று தென்பட்டது. முதலில் அது சாதாரண யூரோ நாணயங்களாக இருக்கலாம் என அவர் நினைத்துள்ளார்.
ஆனால், அருகில் தோண்டிப் பார்த்தபோது தங்கக் கட்டிகளும் தங்க நாணயங்களும் அடங்கிய ஒரு பை கிடைத்தது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததுடன், தான் கண்டெடுத்தது மிகப்பெரிய புதையல் என்பதை உணர்ந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், புதையல் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிகாரிகளின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, இந்த தங்கப் புதையலின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.98 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் புதையலுக்கு உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெல்ஜிய சட்டப்படி, புதையலின் உரிமையை நிரூபிக்க உரிமை கோருபவர்களுக்கு 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |